Wednesday, May 28, 2008

Manzil மன்ஜில்


بسم الله الرحمن الرحيم

மன்ஜில்
அற்புத நோய் நிவாரணி


உயர்வு மிக்கோனும் மகத்துவம் மிக்கோனுமாகிய அல்லாஹூதஆலாவைப் புகழ்ந்தவனாக, அல்லாஹூதஆலா, தன்னுடைய படைப்புகளில் உன்னதமாகிய, தன்னுடைய அன்பின் வெளிப்பாடாகிய, தன்னுடைய அர்ஷின் ஒளியாகிய, எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார்கள், தோழர்கள் அனைவரின் மீதும் அதிகமதிகமான ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்தருள்வானாக! ஆமீன்!
இந்த மன்ஜில்-அற்புத நோய் நிவாரணி ஒரு அனுபவப்பூர்வமான அமலாகும். இதன் பயன் எல்லா முஸ்லிம் சமுதாய மக்களிடம் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் இதனை சமர்பிக்கின்றேன். இதனை ஓர்மையாக அதிகமதிகம் ஓதி என்னுடைய சொந்த அனுபத்திலும் பல விசயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ். எல்லாப்புகழும் வல்ல அல்லாஹ்விற்கே!

முன்னுரை

(விசுவாசிகளே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் மெதுவான குரலிலும் உங்கள் இரட்சகனிடமே (உங்கள் தேவையைக் கோரிப்) பிரார்த்தியுங்கள். (அல்குர்ஆன் 7:55)

இந்த மன்ஜில் கண்ணேறு, சூனியம், பைத்தியம், ஷைத்தான், விலங்குகள், திருடர்கள் பயம், தீராத உடல் மனோ வியாதி, மனக்குழப்பம், திடுக்கம் மற்றும் எல்லா முஸீபத்துகளிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்புப் பெற மார்க்க பெரியார்களால் அமல் செய்து பலன் கண்ட அருமருந்தாகவும், அற்புத நோய் நிவாரணியாகவும், அனுபவப்பூர்வமான அமலாகவும் இருக்கிறது.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி மன ஓர்மையுடன் அன்றாடம் ஓதி வருவதால் முஸ்லிம் சமுதாயத்திற்கு அளப்பரிய நன்மைகள் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்!

குதுபுல் அக்தாப் மெளலானா முஹம்மது ஜக்கரிய்யா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது குடும்பத்தாரில் வழமையாக ஓதப்பட்டு வரும் 33 ஆயத்துகள் கொண்ட இம் மன்ஜிலினால் முஸ்லிம்கள் அனைவரும் பயனடைய வேண்டுமென்ற நன்னோக்கத்தோடு ஆதாரப்பூர்வமான ஹதீஸிலிருந்து எடுத்து வழங்கியுள்ளார்கள். எனவே இந்த மன்ஜிலை முஸ்லிம்கள் அனைவரும் தாமும் ஓதுவதுடன் பிறரையும் ஓதத் தூண்டி ஈருலக நன்மைகளை அடையச் செய்வதுடன் ஆபத்துகளிலிருந்தும், நோய்களிலிருந்தும், கெடுதிகளிலிருந்தும் முஸ்லிம் சமுதாய மக்களை தற்காத்துக் கொள்ள வழி செய்யவேண்டும்.

மன்ஜிலுக்கான ஹதீஸின் ஆதாரம்

இது நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் அருளப்பட்டவை. அகில உலக தப்லீக் அமீர் அஷ்ஷைகுல் கபீர் ஹஜ்ரத் மெளலானா ஷா முஹம்மது யூசுப் சாகிப் நவ்வரல்லாஹூ மர்கதஹூ அவர்கள் தமது “ஹயாத்துஸ் ஸஹாபா” என்னும் கிதாபின் மூன்றாம் பாகம் 374 ஆம் பக்கத்தில் இமாம் அஹமது, ஹாகிம், திர்மிதீ ஆகியோரின் அறிவிப்பின் வாயிலாக இம் மன்ஜிலின் சிறப்பை விளக்கியுள்ளார்கள்.

ஹஜ்ரத் உபை இப்னு கஅஃபு ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சமீபத்தில் இருந்தபோது, ஒரு கிராமவாசி அங்கு வந்து நாயகமே! எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். அவருடைய நோய் என்ன? என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வினவியதற்கு அவர் ‘ஒரு வகையான பைத்தியம்’ என்றார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் சமுகத்திற்கு (அவரை) அழைத்து வரச் செய்து, அவர் முன்னிலையில் அவூது பில்லாஹி ஓதி, சூரத்துல் பாத்திஹா, சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலுள்ள நான்கு ஆயத்துக்கள், இலாஹூகும் இலாஹூன் வாஹித் என்ற ஆயத், ஆயத்துல்குர்ஸீ, சூரத்துல் பகராவின் கடைசியிலுள்ள மூன்று ஆயத்துக்கள், ஷஹிதல்லாஹூ அன்னஹூ என்ற ஆயத், சூராமுஃமினீனின் இறுதியிலுள்ள ஃபத ஆலல்லாஹூல் மலிக்குல் ஹக் என்ற ஆயத், சூரா ஜின்னில் உள்ள வஅன்னஹூ தஆலா ஜத்து ரப்பினா என்ற ஆயத், சூரா வஸ்ஃஸாபாத்திலுள்ள முதல் பத்து ஆயத்துக்கள், சூரா ஹஷ்ருடைய கடைசி மூன்று ஆயத்துக்கள், சூரா குல்ஹூவல்லாஹூ, சூரா குல்அவூது பிரப்பில்ஃபலக், சூரா குல்அவூது பிரப்பின்னாஸ் ஆகியவற்றை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு நோய் ஏதேனும் இருந்ததாக எண்ணுவதற்குக கூட இடமில்லாதவாறு அவர் ஆகிவிட்டார்.

இந்த மன்ஜில் முழுமையாக குர்ஆன் ஷரீபின் ஆயத்துக்களாக இருப்பதால், குளிப்பு விதியானவர்களும், ஹைலு நிபாசுடைய பெண்கள் ஆகியோரும் இதனைத் தொடுவதும் (புத்தகவடிவில் இருந்தால்), ஓதுவதும் கூடாது. சுத்தமான பிறகு ஓதிக்கொள்ளவும்.

இந்த மன்ஜிலைப் பற்றி பெரியார்கள் கூறுகின்ற விளக்கம்

ஹஜ்ரத் அஷ்ரப் அலி தானவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பிஹிஷ்தீ ஜேவர் என்னும் நூலில், எவருக்கேனும் பேய், பிசாசு (ஷைத்தானுடைய கோளாறுகள்) ஆகியவற்றின் கெடுதிகள் இருப்பதாக சந்தேகித்தால், இந்த ஆயத்துகளை எழுதி நோயாளியின் கழுத்தில் போடவேண்டும். இன்னும் இதனை ஓதித் தண்ணீரில் ஊதி நோயாளியின் மீது தெளிக்க வேண்டும். வீட்டில் இது போன்ற இடையூறுகள் ஏதேனும் ஏற்பட்டால் இதனை ஓதித் தண்ணீரில் ஊதி வீட்டின் நான்கு மூலைகளிலும் தெளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அல் கவ்லுல் ஜமீல் என்னும் நூலில், இந்த முப்பத்து மூன்று ஆயத்துகள் சூனியத்தின் கெடுதியை முறியடித்து விடுகின்றன. இன்னும் ஷைத்தான், திருடர், கொடிய மிருகங்கள் ஆகியவற்றின் தீங்குகளைவிட்டும் பாதுகாப்பளிக்கின்றன என எழுதியுள்ளார்கள்.

ஷைகுல் ஹதீஸ், மர்ஹூம் மெளலானா முஹம்மது ஜக்கரிய்யா ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மகனார் மெளலானா முஹம்மது தல்ஹா ஸாஹிப் அவர்கள் இதிற்காணும், குர்ஆன் ஆயத்துக்கள் எங்கள் குடும்பத்தில் மன்ஜில் என்னும் பெயரால் பிரபலமானவை. எங்கள் பரம்பரையில் உள்ள பெரியார்கள் அனைவரும் அமல்களிலும், துஆக்களிலும் இதற்கு மிக முக்கியத்தவம் அளித்து வந்துள்ளார்கள். குழந்தைகளுக்குச் சிறு பிராயத்திலேயே இந்த மன்ஜிலை முக்கியத்துவத்துடன் பாடமாக்கிக் கொடுக்கும் வழக்கமும் இருந்துவருகின்றது.
தகடு, தாயத்துகளுக்குப் பதிலாக குர்ஆனின் ஆயத்துக்களும், ஹதீஸில் அருளப்பட்டுள்ள துஆக்களும் நிச்சயம் மிக்க பலனுள்ளவையாகவும், குணமளிப்பவையாகவும் இருக்கின்றன. ஆகையால், அமலில் அவற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தீன், துன்யாவுடைய எந்தத் தேவைகளுக்கும், நோக்கங்களுக்கும் துஆவின் வழிமுறையைக் கற்றுக் கொடுக்காமல் விட்டதில்லை. அவ்வாறே, சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக ஓதுவது பெரியோர்களின் வழக்கமாகவும் இருந்து வந்திருக்கிறது.
இந்த மன்ஜில் ஷைத்தானுடைய கோளாறு, சூனியம் போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற அனுபவப்பூர்வமான ஓர் அமலாகும். இது சிறிது கூடுதல், குறைவாக அல் கவ்லுல் ஜமீல், பிஹிஷ்தீ ஜேவர் ஆகிய கிதாபுகளில் கூறப்பட்டுள்ளது.

இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் வைப்பது அவசியம். அமல்களிலும், துஆக்களிலும் அதிகமான பலன்கள் ஏற்பட, ஓதுபவர் ஓர்மையையும், தனிமையையும் மேற்கொள்வது மிக அவசியம். எந்த அளவு மன ஓர்மையுடனும் நம்பிக்கையுடனும் ஓதப்படுகிறதோ, அந்த அளவிற்கு இது பலன்தர வல்லதாகும். அல்லாஹூதஆலாவின் திருநாமங்களிலும், அவனது பரிசுத்தத் திருவசனங்களிலும் பெரும் பரக்கத்துகள் அடங்கியிருக்கின்றன.

மன்ஜிலின் 33 ஆயத்துகள்



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகின்றேன்).
அனைத்துப் புகழும், அகிலங்கள் அனைத்தி(னையும் படைத்துப் பரிபக்குவப்படுத்துகி)ன்(ற) ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
(அவன்) அளவற்ற அருளாளன்; மிகக் கிருபையுடையவன்.
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.
(யா அல்லாஹ்!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
எங்களை நீ நேர்வழியில் நடத்துவாயாக!
எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் (நடத்துவாயாக!),
(அது) உன் கோபத்துக்குள்ளானோர் வழியுமல்ல; நேர்வழி தவறியோர் வழியுமல்ல. (1:1-7)



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகின்றேன்).
அலிஃப் லாம் மீம்.
இது (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோர்க்கு (இது) நேர்வழி காட்டியாகும்.
(பயபக்தியடைய) அவர்கள் எத்தகையவர்கள் என்றால் (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றைக் கொண்டு நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்
(நபியே!) இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் (வந்த நபிமார்களுக்கு) அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.
இவர்கள்தாம் தங்கள் ரப்பில் நின்றுமுள்ள நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (2:1-5)



மேலும், உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; அவனைத் தவிர வேறு நாயனில்லை; அவன் அளவற்ற அருளாளன், மிகக் கிருபேயுடையோன். (2:163)


அல்லாஹ் (எத்தகையவனென்றால்) -அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் (வேறு) இல்லை; (அவன் என்றும்) உயிருள்ளவன்; (என்றும்) நிலைத்திருப்பவன்; அரிதுயிலோ (சிறு தூக்கமோ), ஆழ்ந்த நித்திரையோ அவனைப் பீடிக்கா; வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியவை; அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன்னால் உள்ளவற்றையும், அவர்களுக்குப் பின்னால் உள்ளவற்றையும் அவன் அறிவான்; அவனுடைய இல்மில் (ஞானத்தில்) இருந்து, அவன் நாடியவற்றைத் தவிர (வேறு) எதனையும் அவர்கள் சூழ்ந்தறிந்து கொள்ள முடியாது; அவனுடைய குர்ஸிய்யு (என்னும் அரியாசனம்) வானங்களையும் பூமியையும் அடைய வளைந்து கொண்டுள்ளது; அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்காது -அவன் மிக உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். (2:255)
(இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை; நேர்வழியாகிறது, வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவிட்டது; எனவே, எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து, அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்கிறாரோ, அவர் பிரிந்து போகாததாக உள்ள (முறுக்கேற்றப்பட்ட கயிற்றின்) உறுதியான முடிச்சைத் திட்டமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார் - அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுகிறவனாகவும், முற்றும் அறிந்தவனாகவும் இருக்கிறான். (2:256)
அல்லாஹ்வே முஃமின்களுக்குப் பாதுகாவலன் (ஆவான்); அவர்களை இருள்களிலிருந்து ஒளியின் பால் அவன் வெளிப் படுத்துகிறான்; ஆனால், காபிர்களுக்கோ-அவர்களுடைய உதவியாளர்கள் ஷைத்தான்கள்தாம்! அவர்களை ஒளியிலிருந்து இருள்களின்பால் (ஷைத்தான்களாகிய) அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்; அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (2:257)


வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்; உங்கள் மனங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும் அல்லாஹ் அதைப் பற்றி உங்களிடம் கணக்குக் கேட்பான்; பின்னர், தான் நாடியவரை அவன் மன்னிப்பான்; இன்னும் தான் நாடியவரை வேதனை செய்வான் – அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுடையவன்.
(அல்லாஹ்வின்) ரஸூல் தம் ரப்பிடமிருந்து தம்மீது இறக்கி வைக்கப்பட்டதைக் கொண்டு ஈமான் கொண்டுள்ளார்; இன்னும் முஃமின்களும் (ஈமான் கொண்டுள்ளனர்); அ(வர்கள)னைவரும் அல்லாஹ்வைக் கொண்டும், அவனுடைய மலக்குகளைக் கொண்டும், அவனுடைய வேதங்களைக் கொண்டும், அவனுடைய ரஸூல்களைக் கொண்டும் ஈமான் கொண்டுள்ளனர்; இன்னும், ‘அவனுடைய ரஸூல்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை காண்பிக்கமாட்டோம்;’ என்றும், மேலும், “நாங்கள் செவியேற்றோம்; (உன் கட்டளைக்கு) வழிப் பட்டோம்; எங்கள் ரப்பே! உன்னுடைய மன்னிப்பை வேண்டுகிறோம் – (நாங்கள்) மீளுவதும் உன் பக்கமேதான்” (என்றும் கூறுகின்றனர்.)
அல்லாஹ் எந்த ஆத்மாவிற்கும் அதனுடைய சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை; (நன்மையிலிருந்து) அது சம்பாதித்த்து அதற்கே (பயனுள்ளதாக) ஆகும்; இன்னும் (தீமையிலிருந்து) அது சம்பாதித்துக் கொண்டதும் அதன்மீதே (கேடாக) ஆகும்; எங்கள் ரப்பே! நாங்கள் மறந்து விட்டாலும், அல்லது நாங்கள் தவறு செய்திருந்தாலும் நீ எங்களைக் (குற்றம்) பிடியாதிருப்பாயாக! எங்கள் ரப்பே! எங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நீ (பளுவான சுமையில்) எதனைச் சுமத்தினாயோ அதுபோன்று எங்களின் மீது பளுவான சுமையைச் சுமத்தாதிருப்பாயாக! எங்கள் ரப்பே! இன்னும் எங்களுக்கு எதில் சக்தியில்லையோ அந்த ஒன்றை எங்களுக்கு நீ சுமத்தாதிருப்பாயாக! எங்களை விட்டும் (எங்கள்) பாவங்களை அழித்திடுவாயாக! எங்களை மன்னித் தருள்வாயாக! எங்களுக்கு கிருபை செய்தருள்வாயாக! நீயே எங்கள் நாயன்; எனவே, காபிரான கூட்டத்தினருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி செய்தருள்வாயாக! (என்றும் முஃமின்கள் பிரார்த்திப்பார்கள்.) (2:284-286)



நிச்சயமாக, தன்னைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான் – நீதத்தைக் கொண்டு அவன் நிலை பெற்றவனாக இருக்கும் நிலையில்; இன்னும் மலக்குகளும், கல்வி ஞானமுடையோரும் (சாட்சி கூறுகின்றனர்); அவனைத் தவிர (வேறு) எந்த நாயனும் இல்லை; (அவன் யாவற்றையும்) மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான். (3:18)


(நபியே) நீர் கூறுவீராக: அல்லாஹூம்ம! ஆட்சிக்கு அதிபதியே! நீ நாடுகிறவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய்; நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைக் கழற்றியும் விடுகிறாய்; இன்னும் நீ நாடியவரை கண்ணியப் படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவுபடுத்துகிறாய்; நன்மை (தீமை) யெல்லாம் உன் கை வசமே உள்ளன-நிச்சயமாக நீ எல்லாப் பெருட்களின் மீது சக்தி உள்ளவன்.
இரவைப் பகலில் நீ நுழையச் செய்கிறாய்; பகலை இரவில் நுழையச் செய்கிறாய்; உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீ வெளிப்படுத்துகிறாய்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை நீ வெளிப்படுத்துகிறாய்; மேலும் நீ நாடியவருக்குக் கணக்கின்றி (வாழ்க்கை வசதிகளை)க் கொடுக்கிறாய். (3:26-27)


நிச்சயமாக உங்களுடைய ரப்பு அல்லாஹ்தான்; அவன் எத்தகையோனென்றால், வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் அவன் படைத்தான்; பின்னர், அர்ஷின் மீது அவன் (தன் ஆட்சியைக் கொண்டு) நிலையானான்; இரவைப் பகலைக் கொண்டு (அவ்வாறே பகலை இரவைக் கொண்டு) அவன் மூடுகிறான்; (இரவு பகலையும், பகல் இரவையும்) அதைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் – இன்னும் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்குக் கட்டுப்பட்டவையாக(ப் படைத்தான்;) அறிந்து கொள்ளுங்கள்; படைத்தலும், கட்டளையிடுதலும் அவனுக்கே சொந்தம்; அனைத்துலகங்களின் ரப்பாகிய அல்லாஹ் முபாரக்கான(- பாக்கியமிக்க)வன்.
(முஃமின்களே!) உங்களுடைய ரப்பைத் தாழ்மையாகவும், மெதுவாகவும் நீங்கள் பிரார்த்தியுங்கள் – நிச்சயமாக அவன் வரம்பு மீறுகிறவர்களை நேசிக்க மாட்டான்.
மேலும், பூமியில் – அது சீரடைந்த பின்னர் – நீங்கள் குழப்பம் செய்யாதீர்கள்; (அல்லாஹ்வுடைய தண்டனையை) அஞ்சியும் (அவன் அருளைப் பற்றி) நம்பிக்கையோடும் அவனையே நீங்கள் (பிரார்த்தித்து) அழையுங்கள் – நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள் நன்மை செய்பவர்களுக்குச் சமீபத்திலிருக்கிறது. (7:54-56)




(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் என்று நீங்கள் அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள்; எதை (வைத்து) நீங்கள் அழைத்தாலும் அவனுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன; (நபியே!) உம்முடைய தொழுகையில் நீர் சப்தமிட்டு ஓத வேண்டாம்; அதில் மிக மெதுவாகவும் ஓத வேண்டாம்; இவற்றிற்கிடையே (நடுத்தரமான) ஒரு வழியைத் தேடிக் கொள்வீராக!
இன்னும் (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது; அவன் எத்தகையோனென்றால், எந்த சந்ததியையும் (தனக்கு) அவன் ஆக்கிக் கொள்ளவில்லை; ஆட்சியில் அவனுக்கு எந்தக் கூட்டாளியும் இல்லை; இன்னும் இயலாமையினால் எந்த உதவியாளனும் அவனுக்கு இருக்கவில்லை; (நபியே! தக்பீர் கூறி) அவனை மாபெரும் பெருமையாகப் பெருமைப் படுத்துவீராக! (17:110-111)



ஆகவே, “உங்களை நாம் படைத்ததெல்லாம் வீணுக்காக” என்றும், இன்னும் “நிச்சயமாக நீங்கள் நம் பக்கம் மீட்டப்பட மாட்டீர்கள்” என்றும் நீங்கள் எண்ணிக் கொண்டீர்களா?
எனவே, உண்மையான அரசனாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன்! அவனைத் தவிர்த்து (வணக்கத்திற்குரிய) எந்த நாயனும் இல்லை – (அவன்) கண்ணியத்திற்குரிய அர்ஷின் ரப்பாக இருக்கிறான்.
எவனொருவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை(ப் பிரார்த்தித்து) அழைக்கிறானோ அவனுக்கு அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; அவனுடைய கணக்கெல்லாம் அவனுடைய ரப்பிடம் இருக்கிறது – நிச்சயமாக, காஃபிர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.
“என்னுடைய ரப்பே! நீ மன்னித்து கிருபை செய்வாயாக! நீ கிருபை செய்பவர்களில் மிகச் சிறந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (23:115-118)



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அணியாக அணிவகுத்து நிற்போ(ரான வானவ)ர் மீது ஆணையாக!
தீவிரமாக ஓட்டிடுவோர் மீது ஆணையாக!
(அல்லாஹ்வின் வேதமாம்) திக்ரை ஓதுவோர்மீது ஆணையாக!
நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவன்தான்.
(அவன்) வானங்கள், பூமி, அவையிரண்டிற்கும் இடையில் உள்ளவை ஆகியவற்றின் ரப்பு; இன்னும் (மேல்த்திசை) கீழ்த்திசைகளின் ரப்புமாவான்.
நிச்சயமாக நாம் (பூமிக்கு) சமீபமாகவுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தைக் கொண்டு அலங்கரித்துள்ளோம்-
அழிச்சாட்டியம் செய்யும் ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாக...(ஆக்கி வைத்தோம்).
உயர்வான கூட்டத்தாரின்பால் (அவர்களின் பேச்சுகளை ஒளிந்திருந்து ஷைத்தான்களாகிய) இவர்கள் கேட்கமாட்டார்கள்; ஒவ்வொரு கோணத்திலிருந்தும் (எரிகொள்ளிகளால்) இவர்கள் எறியப்படுவார்கள் -
துரத்தப்படுவதற்காக; (அன்றியும்) அவர்களுக்கு நிரந்தரமான வேதனையும் உண்டு-
(ஏதேனும் செய்தியை) இறாய்ஞ்சிக் செல்வதற்கு முற்பட்டவனைத் தவிர – அப்பொழுது (சுட்டுப் பொசுக்கும்) பிரகாசமான தீப்பந்தம் அவனைப் பின் தொடரும்.
எனவே (நபியே!) அவர்களிடம் விளக்கம் கேட்பீராக! அவர்கள் படைப்பால் மிகக் கடினமானவர்களா? அல்லது (வானம், பூமி, நட்சத்திரங்கள் முதலிய) நாம் படைத்துள்ளோமே அவையா? (என்று) – நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்தோம். (37:1-11)




ஜின், மனு கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை விட்டும் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் கடந்து செல்லுங்கள்; ஆனால், வல்லமை(யும், நம் அதிகாரமும்) கொண்டே தவிர நீங்கள் கடந்து செல்ல முடியாது.
ஆகவே, உங்கள் இரு(இனத்த)வருடைய ரப்பின் அருட்கொடைகளில் எதனை நீங்கள் இரு(இனத்த)வரும் பொய்யாக்குவீர்கள்?
(மறுமையில் குற்றவாளிகளாகிய) உங்கள் இரு (இனத்த)வர் மீதும் நெருப்பின் ஜூவாலையும், புகையும் அனுப்பப்படும்; அப்போது நீங்கள் இருவரும் உதவி பெற மாட்டீர்கள்.
ஆகவே, உங்கள் இரு(இனத்த)வருடைய ரப்பின் அருட்கொடைகளில் எதனை நீங்கள் இரு(இனத்த)வரும் பொய்யாக்குவீர்கள்?
பிறகு (யுக முடிவில்) வானம் பிளக்கும் போது அது (ஜைத்தூன்) எண்ணெய் போன்று ரோஜா நிறமாய் ஆகிவிடும்.
ஆகவே, உங்கள் இரு(இனத்த)வருடைய ரப்பின் அருட்கொடைகளில் எதனை நீங்கள் இரு(இனத்த)வரும் பொய்யாக்குவீர்கள்?
பிறகு அந்நாளில் மனிதனோ, ஜின்னோ, தம் பாவத்தைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள்.
ஆகவே, உங்கள் இரு(இனத்த)வருடைய ரப்பின் அருட்கொடைகளில் எதனை நீங்கள் இரு(இனத்த)வரும் பொய்யாக்குவீர்கள்? ( 55: 33-40)



(நபியே!) இந்த குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கி வைத்திருந்தால், அதனை – அல்லாஹ்வுடைய பயத்தினால் நடுங்கிகிறதாகவும், பிளந்து விடுவதாகவும் நீர் காண்பீர்; இன்னும் இந்த உதாரணங்கள் – அவற்றை மனிதர்களுக்காக, அவர்கள் சிந்தித்துப் பார்க்கும் பொருட்டு நாம் விளக்கிறோம்.
அவன்தான் அல்லாஹ்: அவன் எத்தகையவனென்றால் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு எந்த நாயனும் இல்லை; (அவன்) மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிகிறவன்; அவன் அளவற்ற அருளாளன்; மிகக் கிருபையுடையவன்.
அவன்தான் அல்லாஹ் – அவன் எத்தகையவனென்றால் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) வேறு எந்த நாயனும் இல்லை; (அவன்) பேரரசன்; மிக்கப் பரிசுத்தமானவன்’ சாந்தி மயமானவன்; பாதுகாப்பளிக்கிறவன்; அபயமளிக்கிறவன்; (யாவற்றையும்) மிகைத்தவன்; அடக்கியாள்கிறவன்; பெருமைக்குரியவன் – அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மகாத் தூய்மையானவன்.
அவன்தான் அல்லாஹ் – படைக்கிறவன்; (படைப்பினங்களை) ஒழுங்குபடுத்துகிறவன், உரு அமைக்கிறவன் – அவனுக்கு அழகிய திருப்பெயர்கள் இருக்கின்றன, வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனைத் தஸ்பீஹ் செய்கின்றன: அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானமுள்ளவன். (59:21-24)



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
(நபியே!) நீர் கூறுவீராக : எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “நிச்சயமாக, ஜின்களில் சில நபர்கள் (இந்த குர்ஆனைச்) செவியுற்றனர்; பிறகு, (தம் கூட்டத்தாரிடம் சென்று) ‘நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம்’ என்று கூறினர்” –
“நேர்வழியின்பால் (குர்ஆனாகிய) அது வழிகாட்டுகிறது; எனவே, நாங்கள் அதன் மீது ஈமான் கொண்டோம்; இன்னும், எங்களுடைய ரப்புக்கு எவரையும் நாங்கள் இணை வைக்கவே மாட்டோம்.”
“இன்னும் நிச்சயமாக, எங்களுடைய ரப்பின் மகிமை உயர்ந்தது; மனைவியையோ புதல்வனையோ (தனக்கு) அவன் ஆக்கிக்கொள்ளவில்லை.”
“இன்னும் நிச்சயமாக, நம்மில் அறிவிலியானவன், அல்லாஹ்வின் மீது (அவனுக்கு இணையானவர், மனைவி, குழந்தை உண்டு என்பது போன்று) அளவு கடந்து பொய் சொல்பவனாகி விட்டான்.”
இன்னும் நிச்சயமாக மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்களென நிச்சயமாக நாம் எண்ணியிருந்தோம். ( 72: 1-5)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
(நபியே!) நீர் சொல்வீராக : காபிர்களே!
நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்கமாட்டேன் –
நான் வணங்குகிற ஒருவனை நீங்கள் வணங்குகிறவர்கள் அல்லர்.
இன்னும் நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்குபவனல்லன் –
மேலும் நான் வணங்குகிற ஒருவனை நீங்கள் வணங்குகிறவர்கள் அல்லர்.
உங்களுக்கு, உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். (109:1-6)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
(நபியே!) நீர் கூறுவீராக: அவன்-அல்லாஹ் ஒருவனே!
அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை; அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை –
இன்னும் அவனுக்கு ஒப்பாக எவரும் இலர். (112:1-4)



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
(நபியே!) நீர் கூறுவீராக : அதிகாலையுடைய ரப்பிடம் நான் காவல் தேடுகிறேன்.
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
இரவின் தீங்கை விட்டும் (அதில்) இருள் படரும்போது –
முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதுகின்ற பெண்களின் தீங்கை விட்டும் –
பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் – அவன் பொறாமை கொள்ளும் போது (நான் காவல் தேடுகிறேன்.) (113:1-5)



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
(நபியே!) நீர் கூறுவீராக : மனிதர்களுடைய ரப்பிடம் நான் காவல் தேடுகிறேன் –
(அவன்) மனிதர்களின் அதிபதி –
(அவன்) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன்.
மறைந்திருக்கும்படியான (ஷைத்தானான)வனின் ஊசாட்டங்களின் தீங்கை விட்டும் (நான் காவல் தேடுகிறேன்.)
அவன் எத்தகையவனென்றால் மனிதர்களில் நெஞ்சங்களில் தவறான ஊசாட்டங்களை உண்டாக்குபவன் –
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.


முடியுரை

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய அமல்களில் மனத்தூய்மையைத் தந்து, நம்முடைய ஹலாலான தேவைகளை அவனுடைய கட்டளைப்படியும், அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சுன்னத்தான வாழ்க்கைவழி முறைப்படியும் நிறைவேற்றிக்கொள்ள அருள்புரிவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்

இவண்

கா. சே. செய்யது அஹமது கனி
சவுதி அரேபியா.

No comments: